
வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா!
வருவாய் வருவாய் வருவாய்!
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா!
உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா! (வருவாய்)
இணைவாய் எனதா வியிலே கண்ணா!
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)
எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா!
துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)