Wednesday, April 21, 2010

திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா..


திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா
பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா
நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (2)
நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய்..()

வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய்
பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய்
அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய்
பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய்.. ( )

அலர்மேலு மங்கையவள் அழகினில் கலந்தவனே
அளவிலா நன்மைதரும் திருமலை வேந்தனே
கருணை விழிகளால் அருளை பொழிவாய்
கனிவான வாசனே எங்கள் ஸ்ரீனிவாசனே..( )

Thursday, April 8, 2010

அழகான தாமரைமேல்..


அழகான தாமரைமேல் எழிலாக அமர்ந்திருக்கும் அலர்மேலுமங்கை மணவாளா
ஏழுமலை மீது காட்சிதந்து ஏழுலகம் ஆட்சிசெய்யும் மங்களநாயகா வெங்கடேசா
    எங்களை ஆளவா ஸ்ரீனிவாசா..(அழகான)

தழைத்தோங்கும் செந்தமிழில் உனைப் பாடுவேன்
நீ தயங்காமல் வருவாய் என் கண்ணா
மழையினில் மழை தன்னை குடையாய்ப் பிடித்தவனெ
மலைஏழும் தாங்கி நிற்கும் மாதவனே மாயவனே (அழகான )

விழிகள் இரண்டும் ஒளிவிடும் தீபங்கள்
வழிகாட்டும் கீதையோ நீ தந்த பாடங்கள்(2)
அரியே உன் அருள்தானே இன்னிசை நாதங்கள்(2)
சரணடைந்தேன் உந்தன் தாமரைப் பாதங்கள் (2) (அழகான)

திருமலை வருவோர்க்கு சேர்ந்திடும் செல்வங்கள்
திருவடி பணிவோர்க்கு பெருகிடும் சுகங்கள்
திருமார்பில் மங்கையுடன் மின்னிடும் வைரங்கள்
பரந்தாமா நீ தருவாய் நான் கேட்கும் வரங்கள்(2)(அழகான)

அல்லும் பகலும் உன்னை தொழுதிடும் அன்பர்கள்
     கோரிக்கை ஏற்கும் கோவிந்தா
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம்
    நீதானே ஹரி கோவிந்தா
சங்கு சக்கரம் கொண்ட உன்கரம் இன்பம்
    என்றும் தரும் கோவிந்தா
எந்தநாளுமே சுப்ரபாதமே பாடிடுவேன்
     ஹரி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...