Thursday, May 6, 2010

வருவாய் வருவாய் வருவாய் கண்ணா!


வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா!
வருவாய் வருவாய் வருவாய்!

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா!
உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா! (வருவாய்)

இணைவாய் எனதா வியிலே கண்ணா!
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)

எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா!
துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)

Wednesday, April 21, 2010

திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா..


திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா
பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா
நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (2)
நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய்..()

வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய்
பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய்
அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய்
பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய்.. ( )

அலர்மேலு மங்கையவள் அழகினில் கலந்தவனே
அளவிலா நன்மைதரும் திருமலை வேந்தனே
கருணை விழிகளால் அருளை பொழிவாய்
கனிவான வாசனே எங்கள் ஸ்ரீனிவாசனே..( )

Thursday, April 8, 2010

அழகான தாமரைமேல்..


அழகான தாமரைமேல் எழிலாக அமர்ந்திருக்கும் அலர்மேலுமங்கை மணவாளா
ஏழுமலை மீது காட்சிதந்து ஏழுலகம் ஆட்சிசெய்யும் மங்களநாயகா வெங்கடேசா
    எங்களை ஆளவா ஸ்ரீனிவாசா..(அழகான)

தழைத்தோங்கும் செந்தமிழில் உனைப் பாடுவேன்
நீ தயங்காமல் வருவாய் என் கண்ணா
மழையினில் மழை தன்னை குடையாய்ப் பிடித்தவனெ
மலைஏழும் தாங்கி நிற்கும் மாதவனே மாயவனே (அழகான )

விழிகள் இரண்டும் ஒளிவிடும் தீபங்கள்
வழிகாட்டும் கீதையோ நீ தந்த பாடங்கள்(2)
அரியே உன் அருள்தானே இன்னிசை நாதங்கள்(2)
சரணடைந்தேன் உந்தன் தாமரைப் பாதங்கள் (2) (அழகான)

திருமலை வருவோர்க்கு சேர்ந்திடும் செல்வங்கள்
திருவடி பணிவோர்க்கு பெருகிடும் சுகங்கள்
திருமார்பில் மங்கையுடன் மின்னிடும் வைரங்கள்
பரந்தாமா நீ தருவாய் நான் கேட்கும் வரங்கள்(2)(அழகான)

அல்லும் பகலும் உன்னை தொழுதிடும் அன்பர்கள்
     கோரிக்கை ஏற்கும் கோவிந்தா
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம்
    நீதானே ஹரி கோவிந்தா
சங்கு சக்கரம் கொண்ட உன்கரம் இன்பம்
    என்றும் தரும் கோவிந்தா
எந்தநாளுமே சுப்ரபாதமே பாடிடுவேன்
     ஹரி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...

Saturday, March 20, 2010

அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்


அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்
அடியாரனைவரும் எழுந்து நீராடி
ஆலய மணிகள் இசைத்து
அன்போடு பாடும் சுப்ரபாதம்..சுப்ரபாதம்..( )

சங்க நாதம் உன் துயில் நீக்கும்
தங்க மேனிக்கு தைலாபிஷேகம்
வாஞ்சையோடு நீராட்டி துடைத்து
பன்னீரில் கரைத்த சந்தனம் எடுத்து
கண்ணா உன் திருமேனி எங்கும் பூச..()

மகுடம் தன்னில் மயில்பீலி வைத்து
மலர்மாலை சூட்டி சலங்கை கட்டி
கோபியிட்டு பட்டுக் கோவணம் கட்டி
குருவாயூரப்பா குழந்தை கண்ணா
உன் கையில் வெண்ணெயை உருட்டி வைக்க..()

Thursday, March 11, 2010

மாயக் கண்ணன் சிரிக்கின்றான்


மாயக் கண்ணன் சிரிக்கின்றான் - எங்கள்
மன்னன் கண்ணன் சிரிக்கின்றான்
அன்புக் கண்ணன் சிரிக்கின்றான் (2) - எங்கள்
ஆசைக் கண்ணன் சிரிக்கின்றான்..(மாய)

கோடிகோடி அடியவர் கண்டு சிரிக்கின்றான்
நாடிநாடி வந்து சேரும் மாந்தர் கண்டு சிரிக்கின்றான்
பாடிபாடி புகழ்கின்ற பாடல் கேட்டு சிரிக்கின்றான்
ஆடிஆடி மகிழ்கின்ற ஆடல்கண்டு சிரிக்கின்றான்..(மாய)

குழலிசையின் சொந்தக்காரன் கைகொட்டிச் சிரிக்கின்றான்
கோபியர்கள் வாழ்வே ஆன கோபாலனே சிரிக்கின்றான்
காளிங்க நர்த்தனம் புரிந்த மாயன் கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றான்
கடமையை செய்ய சொன்ன கண்ணன் கன்னம் குழைய சிரிக்கின்றான்..(மாய)

நிரந்தரமாய் இனிவு கொண்டவனே


நிரந்தரமாய் இனிவு கொண்டவனே
நின் பேரழகைக் காண பேறு செய்தேன்
சுதந்திரமாய் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனே ( )

அழகுமிகு மயில்பீலி அணிந்தவனே
குழலினை தாங்கும் மென்வாயிதழ் உடையவனே
குழந்தையாக பல ஜாலங்கள் செய்தவனே
குவலயத்தை வாய் திறந்தே தாயிடம் காட்டியவன்

காதல் பொங்கும் உந்தன் கண்களை கண்டனரே
பொழிவு மங்கையர் மயங்கியே நின்றனரே(2)
ஒன்றுமே அறியாதவன் போன்றே நீயுமே
மாயக் குழலினை இசைத்தாயே சொல்லிடுவாய் ஏன் கண்ணா..()

Friday, March 5, 2010

கொண்டல் வண்ணனை..


கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..
- நாலாயிர திவ்யப்ரபந்தம்

நாடிவந்த செல்வம் தன்னை..


நாடிவந்த செல்வம் தன்னை ஏழைகட்கு நீ கொடுத்து
நாட்கள் முற்றும் பாடு கண்ணனை..
நல்லவர்கள் சொற்சரத்தில் உள்ளமுற்றுமே இணைத்து
நாளும் பாடு கீதை வர்ணனை..
நாளும் பாடு கீதை வர்ணனை..(நாடிவந்த)

தேடி ஓடு ஈசன் பாதம் ஓது ஓது தேவ வேதம்
செய்க என்றும் தெய்வசிந்தனை..
சிறிது மட்டும் சொன்னதுண்டு அதிகம் சொல்லத் தேவையில்லை
தீமையாகும் தெய்வ நிந்தனை..(நாடிவந்த)

கோடி கோடி வந்தபோதும் நோய்நொடிக்கு நீ இலக்கு
கூடுவாய் அத்தேவன் பாதமே..
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில் கீதை சொன்ன
கோகுலனைப் பாடு உள்ளமே..(நாடிவந்த)

பச்சை மாமலைபோல் மேனி


பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--
- நாலாயிர திவ்யப்ரபந்தம்

புல்லாய்ப் பிறவி தரவேண்டும்


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : செஞ்சுருட்டி
........................
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - புனிதமான
பல கோடி பிறவி தந்தாலும்
பிருந்தாவனமிதிலொரு - (புல்லாய்)

புல்லாகினும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே கண்ணா
கமல மலரிணைகள் அணைய எனதுள்ளம்
புளகிதமுற்றிடும் பவமற்றிடுமே - (புல்லாய்)

ஒருகணம் உன்பதம் படுமெந்தன்மேலே
ம்றுகணம் நான் உயர்வேன் விண்மேலே
திருமேனி என்மேலே அமர்ந்திடும் ஒருகாலே
திருமகளென மலர்பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம்தருவேனே
திசைதிசை எங்கனும் பரவிடும் குழலிசை
மயங்கிவரும் பலகோபியருடனே (2)

சிறந்த ரசம்மிகு நடம் நீ ஆடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே
தவமிகு சுரரோடு முனிவருடன் நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே
..யமுனை துறைவனே..(புல்லாய்)

Wednesday, March 3, 2010

சென்று வா நீ ராதே..


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : ராகமாலிகா
………………………………………….
சென்று வா நீ ராதே இந்தப் போதே - இனி
சிந்தனை செய்திட நேரமில்லை (சென்று வா)

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே - அவரை
காண வரும் ஆயர் கூட்டத்திலே
சற்று நின்று பேசிட நேரமில்லை(2) - அவருக்கு
நேரில் வரஒரு தோதுமில்லையடி (சென்று வா)

சொன்னாலும் புரியாது ராதே - உனக்கு
தன்னாலும் தோன்றாது ராதே - அந்த
மன்னனை நம்பாதே - ஆயர்குல
மன்னனை நம்பாதே - அந்த
மனனனின் வாக்கெல்லாம் மண்தின்ற வாய்தானே
ராதே ராதே.. (சென்று வா)

உலகை அளந்தவருக்கு உன்னிடம் வந்தொருபொய்
மூட்டி அளப்பதும் பாரமா..
கண்ணன் நலம்வந்து ஆயிரம் சொன்னாலும் அதை
நம்பிவிட நியாயமாகுமா..
ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்
சொல்வதெல்லாம் உண்மையாகுமா..
தலத்தருகே கண்ணன் தனித்து வருவதென்றால்
தவப்பயன் ஆகுமே..வினைப்பயன் போகுமே..(சென்று வா)

Tuesday, March 2, 2010

கண்ணா உன் சன்னிதியில்..


கண்ணா உன் சன்னிதியில் நானும் இடம்பெறவேண்டும்
கருணையுடன் எனக்கு அருள்வாய்..
காலடியில் நானிருக்க காலமெல்லாம் தொழுதிருக்க
தகுதியை எந்தனுக்கு அருள்வாய்..(கண்ணா)

ஊதுவத்தி எரிவதென்ன அதற்கிங்கு தகுதியென்ன
உணர்ந்திட நானும் கொஞ்சம் விழைந்தேன்
தன்னையே எரித்துகொண்டு தருவது நறுமணத்தை
தியாகமே தகுதியென்று உணர்ந்தேன்..

பற்றியது கற்பூரம் சுற்றியது தட்டோடு
காட்டியது கண்ணா உன் உருவை
எரிந்தது கற்பூரம் எதுவுமே மிச்சமில்லை
தெரிந்தது தேவையான தகுதி..

புல்லாங்குழல் உனது கைகளில் தவழ்ந்திருக்க
புண்ணியம் செய்ததென்ன வியந்தேன்..
காட்டிலே வாழ்ந்த அது வீட்டினை விட்டுவந்து
கஷ்டமிக ஏற்றதனை உணர்ந்தேன்..
அங்கமெல்லாம் சீவிசீவி அறுத்தனர் துண்டு துண்டாய்
அனலில் இட்டு அதை வாட்டி
துளைத்தனர் உடல் முழுதும்
சகித்தது அத்தனையும்..
கிடைத்தது கண்ணா உன் ஸ்பரிஸம் ..(கண்ணா)

யசோத நந்தபால கோபாலனே


யசோத நந்தபால கோபாலனே
ஏழை என்மீதேன் வன்மமோ
பேதை என் ஓலம் கேட்டுமே
பேசாதிருப்பதேன் கேசவா..()

நந்தகுமாரா நவனீத சோரா பிருந்தாவன வாசி கோவிந்தா
வெண்ணை அள்ளி உண்ட வேணுகானனே
மண்ணை அள்ளி உண்ட மதுசூதனா
பண்ணிசைத்த பாவையர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்ட கோமள வண்ணனாம்..
கோமளமாம் அந்த கேரளம் தன்னில்
கோயில் கொண்ட குருவாயூரப்பா (2)
கோடி தவம் நான் செய்தாலுமே-உன்
கோலம் கண்பேனோ என் வாழ்விலே
தேட கிடைக்காத செல்வமே
தேவாதிதேவா நாராயணா..
நாராயணா நமோ நாராயணா
நாராயணா லஷ்மி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா...

Monday, March 1, 2010

குழலூதி மனமெல்லாம்..


வரிகள் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ராகம் : காம்போதி
தாளம் : ஆதி
--------------------------------------
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் எனக்கேதடீ (குழலூதி)

அழகான மயில் ஆடவும் - மிக
அழகான மயில் ஆடவும் - காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)

மகர முண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழிலாகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)

Saturday, February 27, 2010

பார்வை ஒன்று போதுமே..


வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : சுருட்டி
தாளம் : ஆதி
........................
பார்வை ஒன்று போதுமே கண்ணா கண்ணா - கள்ள
பார்வை ஒன்று போதுமே கண்ணா கண்ணா - சங்கப்
பதும நிதி இரண்டும் வலியத் தந்தாலென்ன கள்ளப் (பார்வை)

கார்முகில் போல்வண்ண கதிரென்ன மதியென்ன
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் கள்ளப் (பார்வை)

அன்னை யசோதை அருகினிலே சென்று இவன்
வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்(2)
அன்னையின் பின்னை சென்று அணைத்துக்கொண்டு நின்று
'சொல்லாதே' என்று கண்ணா சொல்லிடும் –கள்ளப் (பார்வை

எந்த விதமாகிலும்..


வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : காம்போதி
தாளம் : ஆதி
.............................
எந்த விதமாகிலும் நந்த முகுந்தனை நீ
இந்த வழி வரும் வரை பாரடி (2) - சற்று
இந்த வழி வரும் வரை பாரடி ( எந்த)

கந்தம் கமழ் குழலி ராதே...
கந்தம் கமழ் குழலி ராதே ராதே என்று
ராதே ராதே என்று
கனிய மனமுருகி புனைந்துரைத்து
கள்ளத்தனமென்று மெள்ள நீ சொல்லி..
செய்வதெல்லாம் வஞ்சம் அல்லவோ பெண்ணே..
அல்லவோ பெண்ணே
சிந்தித்து பாராய் இதையே எண்ணி எண்ணி (2)
கைவிளங்கும் குழலை நீ கவர்ந்தோடி வா பெண்ணே
கைகட்டி ஓடி வருவாரடி- பின்னே
கைகட்டி ஓடி வருவாரடி.. ( எந்த)

Friday, February 26, 2010

வந்ததுவும் போனதுவும்..


வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : பிலஹரி
தாளம் : கண்ட சாபு
.............................
வந்ததுவும் போனதுவும்
இமைப்பொழுது ஆனாலும்
மனமன்றோ களவானதே..
தயிரோடு நவநீதம் களவிட..(வந்ததுவும்)

நந்தகோபன் செய்த தவம்
நல்லதொரு பயனாகி
இந்தவிதமாக வந்து
இன்பமுழு காட்டுதடி..(வந்ததுவும்)

காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழிவாரும் வெண்ணெய்க் கான குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட..(வந்ததுவும்)

Thursday, February 25, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை


வரிகள் : பாரதியார்
ராகம் : ராகமாலிகா
…………………………………..
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்:
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் 'கண்ணை மூடிக்கொள்:
குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (தீராத)

பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்:
வண்ணப் புதுசேலைதனிலே- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் (தீராத)

ராதா மாதவ கோபாலா


ராதா மாதவ கோபாலா
ராக மனோகரசீலா
இரவும் பகலும் நின்பத சிந்தனை
அல்லாமல் உயிரில்லை.. ( )

அலையும் மனம் அமைதி தேடி
அடிபணிந்தேன் கிரிதாரி
அகிலாண்டேஸ்வரன் நீ அல்லால்
அபயம் யார் தருவாரோ.. ( )

மனக்கோயில் தனில் நினைவைத்தேன்
காத்திருப்பேன் முராரி
கருணாசாகரன் நீ அல்லால்
கண்ணா ஓடி நீ வாராய்.... ( )

கண்ணனைத் தேடாத கண்ணுன்டோ..


கண்ணனைத் தேடாத கண்ணுன்டோ - என்
கண் பார்க்கும் யாவுமே நீயன்றோ!
காளிங்கன் தலைமேல் ஆடிய பாதம்
காணும் பாக்கியம் தர வேண்டும்.. (கண்ணனை)

என் மனம் என்கிற யமுனா நதியில்
எத்தனை கோடி ஆணவ அலைகள்
உன் திருப்பாதங்கள் ஆடட்டும் அலைமேல்
உள்ளம் அதற்கு நீதான் காவல்..(கண்ணனை)

பார்த்தனின் சாரதியாய் போரில் முழக்கிய
பாஞ்சசன்யத்தின் ஒலி கேட்கட்டும்.
போர்குரல் தூங்கிய பூமியில் மீண்டும்
பூரண அமைதியை அதுவே தரட்டும்..(கண்ணனை)

பால் வடியும் முகம்..


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர்
ராகம் : நாட்டை குறிஞ்சி
------------------------------
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா( )

நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய ( )

வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோன்றுதே
தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து தோனுதே
கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும்
கானக்குழலோசை மயக்குதே ( )

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகிறுக்கி அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே
குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரின கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)
காளிங்கன் சிரத்திலே பதித்த பதத்திலே
கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்
கனிந்துருக வரம் தருக பரங்கருணை ( )

கண்ணே கண் உறங்கு


கண்ணே கண் உறங்கு.. கண்மனியே உறங்கு
கண்மூடி நீ உறங்கு..
மண்ணும் தான் உறங்க விண்ணும் தான் உறங்க
மன்னா நீ உறங்கு..
அழகு கண்ணா நீ உறங்கு..
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

முத்தே மணியே முக்கனிச்சுவையே
முத்தம் தந்தால் தங்கமே நீயே
சத்தம் எழுந்தே சித்தத்தை மயக்குது
நித்தம் பல நூறு முத்தங்கள் கொடுத்திடு
காலை வரையில் கண்ணா நீ உறங்கு
நீ உறங்கும் அழகு கண்ணுக்கோர் விருந்து
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

சிரிக்கின்ற அழகுக்கு எதை நான் தருவேன்
செய்கின்ற குரும்புக்கு எதை நான் தருவேன்
மழலை உன் பேச்சுக்கு எதை நான் தருவேன்
எதையும் தருவேன் என்னுயிரைத் தருவேன்
காலை வரையில் கண்ணா நீ உறங்கு
நீ உறங்கும் அழகு கண்ணுக்கோர் விருந்து
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

ஆடாது அசங்காது வா கண்ணா


ஆடாது அசங்காது வா கண்ணா
ஆடாது அசங்காது வா கண்ணா…
உன் ஆடலில் ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே – எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா ( )

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான் (2)
ஆதலினால் சிறு யாதவனே – ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே நீ ( )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந் திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
பாடி வரும் அழகா..உனைக் காணவரும்
அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே ( )

Wednesday, February 24, 2010

காக்கைச் சிறகினிலே நந்தலாலா


வரிகள் : பாரதியார்
ராகம் : யதுகுல காம்போதி
தாளம் : ஆதி
......................................
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா! (காக்கை)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! (காக்கை)

கேட்கும் மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா! (காக்கை)

வைகறை பாடும் இன்னிசையோடு..


நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா

நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது
குருவாயூரப்பா என்ற கோஷம் அழைக்கிறது
முந்தைய தினத்தின் சந்தன காப்பில் முகுந்தன் முகமும் சிரிக்கிறது
கைகளில் அள்ளி கன்னத்தை கிள்ள அன்னையர் மனமும் துடிக்கிறது ( )

தைலாபிஷேகம் சங்காபிஷேகம் புஷ்பாபிஷேகம் நடக்கிறது
மயில்பீலி கிரீடம் கஸ்தூரி திலகம் அலங்காரம் கண்ணில் ஜொலிக்கிறது
திருக்கோயில் சுற்றி ஸ்ரீ தேவி யானை ஊர்வலம் தினமும் போகிறது
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
என்ற தாரக மந்திரம் ஒலிக்கிறது
அறியாத பிள்ளை அறியாததில்லை அவனின்றி அணுவும் அசைவதில்லை
குறையென்று வந்து முறையிட்ட பேர்கள் கோரிக்கை வீணே போவதில்லை
தீபங்கள் ஏற்றி நாமங்கள் சொன்னால் பாவங்கள் அருகே வருவதில்லை
வேதங்கள் கூறும் நாமங்கள் அன்றி வெற்றிக்கு வேறு வழியுமில்லை (வைகறை)

Monday, February 22, 2010

காவிரி சூழ்பொழில்...


காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது
ஸ்ரீரங்கம் தெரிகின்றது..(காவிரி)

மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோவில் ஒளிர்கின்றது(2)
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட மண்டபம் மலர்கின்றது..
மணிமண்டபம் மலர்கின்றது.. (காவிரி)

ஆறெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஒரிடம் ஸ்ரீரங்கமே
அந்த ரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன்தான் வைகுண்டமே
அவ்ன்தான் வைகுண்டமே..
போனது போகட்டும் இனியாவது நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்களும் காணட்டுமே ..(காவிரி)

Saturday, February 20, 2010

பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களேன்..


பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களேன் - அந்த
பரந்தாமன் ஆலயத்தை நாடுங்களேன்
எந்நாளும் அவன் நாமம் சொல்லுங்களேன்
இல்லை இல்லை என்போரை வெல்லுங்களேன் (பல்லாண்டு)

இளவேனில் காலத்து புஷ்பங்களே - எங்கள்
யமுனா நதிக்கண்ணன் நயனங்களே
தொடுவானில் தவழ்கின்ற மேகங்களே - எங்கள்
துவாரகை மாமன்னன் ரூபங்களே (பல்லாண்டு)

பாம்பணையில் பாற்கடலில் துயில்கின்றவன்
பக்தர்களின் குரல் கேட்டு எழுகின்றவன்
ஒர் நொடியும் உறங்காமல் உழைக்கின்றவன்
ஆந்த உலகத்தை போல் தினமும் சுழல்கின்றவன் (பல்லாண்டு)

Friday, February 19, 2010

பிருந்தாவனம் பிருந்தாவனம்

பிருந்தாவனம் பிருந்தாவனம்
பெருமையின் மறுபெயரே பிருந்தாவனம்
ஸ்ரீகிருஷ்ணன் வாழ்கின்ற பிருந்தாவனம்
பிருந்தாவனம் பிருந்தாவனம் ( )

கிருஷ்ணா என குரல் கொடுத்தாலே போதும்
யசோதை மைந்தன் வந்திடுவான்
அல்லல் எல்லாம் தீர்த்திடுவான் கண்ணனே
ஆனந்தமாய் கைகொட்டி சிரித்திடுவான்
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா..( )

எண்ணத்தில் கண்ணனையே நினைத்துவிட்டாலே
தங்க கிண்ணத்தில் அமுதம் தருவான்
வண்ண மலராய் மாறிடுவான் கண்ணனே
அகமகிழ்வை அவனே அளித்திடுவான்
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா.. ( )

Thursday, February 18, 2010

காற்றினிலே வரும் கீதம்..


வரிகள் : கல்கி கிருஷ்ணமூர்த்தி
………………………………………………
காற்றினிலே வரும் கீதம்..காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் ..(காற்றினிலே)

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே..நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்.. (காற்றினிலே)

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்.. (காற்றினிலே)

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்..காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்.. (காற்றினிலே)

Wednesday, February 17, 2010

கண்ணபுரம் செல்வேன்..


கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்

வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )

Tuesday, February 16, 2010

கண்ணின் கருமணியே கற்பகத் திருவடியே


கண்ணின் கருமணியே கற்பகத் திருவடியே
காந்த வடிவழகே கருமுகில் வண்ணனே
தேன்சுவை போன்றவனே தெள்ளுதமிழ் ஆனவனே
யமுனா நதி கண்ட இன்ப நினைவலையே
பிருந்தாவன மன்னனே நீ உறங்கு
இதயமே ஸ்ரீ கிருஷ்ணா கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

நந்தகோபன் செல்வமே தேவகியின் திருமகனே
கள்ளச் சிரிப்பினிலே உள்ளம் கவ்ர்ந்தவனே
நேசமுடன் சுடராய் நிம்மதி தருபவனே
குழழினை இசைத்து குவலயம் மயங்க செய்திட வந்தவனே
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

பார்த்தனுக்கு கீதை சொன்ன சாரதியே கண்ணுறங்கு
பாஞ்ச சன்னியத்தை ஒலித்தவனே உறங்கு
ராதையின் உள்ளமான இளமையே கண்ணுறங்கு
கீதையின் நாயகனே எங்களின் நாரணனே ஸ்ரீ கிருஷ்ணனே உறங்கு
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

Monday, February 15, 2010

கீதை சொன்ன கண்ணன்


கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்..
அன்பு வள்ளல் வருகிறான்..
அன்பு வள்ளல் வருகிறான்..வருகிறான்..(கீதை சொன்ன)

நீல மேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ- அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ
வீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரதப் போர் நடத்தி வைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்(கீதை சொன்ன)

அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான் - திரு
அல்லிகேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைக்கிறான்
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே (2)
சொல்ல சொல்ல அய்யன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே (கீதை சொன்ன)

பார்த்தனுக்கு பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்க்கு கையில் ஏந்தும் சங்கு சக்கரம் - அதன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்(கீதை சொன்ன)

Sunday, February 14, 2010

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே..
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களே..(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களே..
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே..(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்..(புல்லாங்குழல்)

பாஞ்சாலி தனை காக்க தன்கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்க்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.. (புல்லாங்குழல்)

Saturday, February 13, 2010

ஆயர்பாடி மாளிகையில்..


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகப்பதம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ – அவன்
பொன்னழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

Friday, February 12, 2010

அலை பாயுதே கண்ணா ..


பாடல் : அலை பாயுதே கண்ணா
வரிகள் : ஊத்தக்காடு வேங்கடசுப்பையர்
ராகம் : கானடா
தாளம் : ஆதி
……………………………………………………………………
அலை பாயுதே கண்ணா..என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே..கண்ணா....

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ..? இது முறையோ..? இது தர்மம் தானோ.?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே ..மனது.. வேதனை மிகவோடு(அலை பாயுதே)

Thursday, February 11, 2010

அசைந்தாடும் மயிலொன்று ..


பாடல் : அசைந்தாடும் மயிலொன்று ..
வரிகள் : ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம் : சிம்மேந்திர மத்யமம்
……………………………………………………
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது
போல் தோன்றும்(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

எங்காகிலும் எமதிறைவா இறைவா
என மனனிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும்
மகிழ்ந்து கொண்டாட(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று
திசையாறும் கோபாலன் இன்று
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட

எங்காகிலும் எமதிறைவா இறைவா
என மனனிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும்
மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

Wednesday, February 10, 2010

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை..


கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்..
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்..

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்..

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்..

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்த கண்ணன் என்பான்...( )

Tuesday, February 9, 2010

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா


ராகம் : சிவ ரஞ்சனி
தாளம் : ஆதி
இயற்றியவர் : ராஜாஜி
பாடியவர் : M.S. சுப்புலக்ஷ்மி
................................
பல்லவி
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 3
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்4
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா