Saturday, March 20, 2010

அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்


அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்
அடியாரனைவரும் எழுந்து நீராடி
ஆலய மணிகள் இசைத்து
அன்போடு பாடும் சுப்ரபாதம்..சுப்ரபாதம்..( )

சங்க நாதம் உன் துயில் நீக்கும்
தங்க மேனிக்கு தைலாபிஷேகம்
வாஞ்சையோடு நீராட்டி துடைத்து
பன்னீரில் கரைத்த சந்தனம் எடுத்து
கண்ணா உன் திருமேனி எங்கும் பூச..()

மகுடம் தன்னில் மயில்பீலி வைத்து
மலர்மாலை சூட்டி சலங்கை கட்டி
கோபியிட்டு பட்டுக் கோவணம் கட்டி
குருவாயூரப்பா குழந்தை கண்ணா
உன் கையில் வெண்ணெயை உருட்டி வைக்க..()

Thursday, March 11, 2010

மாயக் கண்ணன் சிரிக்கின்றான்


மாயக் கண்ணன் சிரிக்கின்றான் - எங்கள்
மன்னன் கண்ணன் சிரிக்கின்றான்
அன்புக் கண்ணன் சிரிக்கின்றான் (2) - எங்கள்
ஆசைக் கண்ணன் சிரிக்கின்றான்..(மாய)

கோடிகோடி அடியவர் கண்டு சிரிக்கின்றான்
நாடிநாடி வந்து சேரும் மாந்தர் கண்டு சிரிக்கின்றான்
பாடிபாடி புகழ்கின்ற பாடல் கேட்டு சிரிக்கின்றான்
ஆடிஆடி மகிழ்கின்ற ஆடல்கண்டு சிரிக்கின்றான்..(மாய)

குழலிசையின் சொந்தக்காரன் கைகொட்டிச் சிரிக்கின்றான்
கோபியர்கள் வாழ்வே ஆன கோபாலனே சிரிக்கின்றான்
காளிங்க நர்த்தனம் புரிந்த மாயன் கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றான்
கடமையை செய்ய சொன்ன கண்ணன் கன்னம் குழைய சிரிக்கின்றான்..(மாய)

நிரந்தரமாய் இனிவு கொண்டவனே


நிரந்தரமாய் இனிவு கொண்டவனே
நின் பேரழகைக் காண பேறு செய்தேன்
சுதந்திரமாய் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனே ( )

அழகுமிகு மயில்பீலி அணிந்தவனே
குழலினை தாங்கும் மென்வாயிதழ் உடையவனே
குழந்தையாக பல ஜாலங்கள் செய்தவனே
குவலயத்தை வாய் திறந்தே தாயிடம் காட்டியவன்

காதல் பொங்கும் உந்தன் கண்களை கண்டனரே
பொழிவு மங்கையர் மயங்கியே நின்றனரே(2)
ஒன்றுமே அறியாதவன் போன்றே நீயுமே
மாயக் குழலினை இசைத்தாயே சொல்லிடுவாய் ஏன் கண்ணா..()

Friday, March 5, 2010

கொண்டல் வண்ணனை..


கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே..
- நாலாயிர திவ்யப்ரபந்தம்

நாடிவந்த செல்வம் தன்னை..


நாடிவந்த செல்வம் தன்னை ஏழைகட்கு நீ கொடுத்து
நாட்கள் முற்றும் பாடு கண்ணனை..
நல்லவர்கள் சொற்சரத்தில் உள்ளமுற்றுமே இணைத்து
நாளும் பாடு கீதை வர்ணனை..
நாளும் பாடு கீதை வர்ணனை..(நாடிவந்த)

தேடி ஓடு ஈசன் பாதம் ஓது ஓது தேவ வேதம்
செய்க என்றும் தெய்வசிந்தனை..
சிறிது மட்டும் சொன்னதுண்டு அதிகம் சொல்லத் தேவையில்லை
தீமையாகும் தெய்வ நிந்தனை..(நாடிவந்த)

கோடி கோடி வந்தபோதும் நோய்நொடிக்கு நீ இலக்கு
கூடுவாய் அத்தேவன் பாதமே..
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில் கீதை சொன்ன
கோகுலனைப் பாடு உள்ளமே..(நாடிவந்த)

பச்சை மாமலைபோல் மேனி


பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..--
- நாலாயிர திவ்யப்ரபந்தம்

புல்லாய்ப் பிறவி தரவேண்டும்


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : செஞ்சுருட்டி
........................
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - புனிதமான
பல கோடி பிறவி தந்தாலும்
பிருந்தாவனமிதிலொரு - (புல்லாய்)

புல்லாகினும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே கண்ணா
கமல மலரிணைகள் அணைய எனதுள்ளம்
புளகிதமுற்றிடும் பவமற்றிடுமே - (புல்லாய்)

ஒருகணம் உன்பதம் படுமெந்தன்மேலே
ம்றுகணம் நான் உயர்வேன் விண்மேலே
திருமேனி என்மேலே அமர்ந்திடும் ஒருகாலே
திருமகளென மலர்பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம்தருவேனே
திசைதிசை எங்கனும் பரவிடும் குழலிசை
மயங்கிவரும் பலகோபியருடனே (2)

சிறந்த ரசம்மிகு நடம் நீ ஆடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே
தவமிகு சுரரோடு முனிவருடன் நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே
..யமுனை துறைவனே..(புல்லாய்)

Wednesday, March 3, 2010

சென்று வா நீ ராதே..


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : ராகமாலிகா
………………………………………….
சென்று வா நீ ராதே இந்தப் போதே - இனி
சிந்தனை செய்திட நேரமில்லை (சென்று வா)

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே - அவரை
காண வரும் ஆயர் கூட்டத்திலே
சற்று நின்று பேசிட நேரமில்லை(2) - அவருக்கு
நேரில் வரஒரு தோதுமில்லையடி (சென்று வா)

சொன்னாலும் புரியாது ராதே - உனக்கு
தன்னாலும் தோன்றாது ராதே - அந்த
மன்னனை நம்பாதே - ஆயர்குல
மன்னனை நம்பாதே - அந்த
மனனனின் வாக்கெல்லாம் மண்தின்ற வாய்தானே
ராதே ராதே.. (சென்று வா)

உலகை அளந்தவருக்கு உன்னிடம் வந்தொருபொய்
மூட்டி அளப்பதும் பாரமா..
கண்ணன் நலம்வந்து ஆயிரம் சொன்னாலும் அதை
நம்பிவிட நியாயமாகுமா..
ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்
சொல்வதெல்லாம் உண்மையாகுமா..
தலத்தருகே கண்ணன் தனித்து வருவதென்றால்
தவப்பயன் ஆகுமே..வினைப்பயன் போகுமே..(சென்று வா)

Tuesday, March 2, 2010

கண்ணா உன் சன்னிதியில்..


கண்ணா உன் சன்னிதியில் நானும் இடம்பெறவேண்டும்
கருணையுடன் எனக்கு அருள்வாய்..
காலடியில் நானிருக்க காலமெல்லாம் தொழுதிருக்க
தகுதியை எந்தனுக்கு அருள்வாய்..(கண்ணா)

ஊதுவத்தி எரிவதென்ன அதற்கிங்கு தகுதியென்ன
உணர்ந்திட நானும் கொஞ்சம் விழைந்தேன்
தன்னையே எரித்துகொண்டு தருவது நறுமணத்தை
தியாகமே தகுதியென்று உணர்ந்தேன்..

பற்றியது கற்பூரம் சுற்றியது தட்டோடு
காட்டியது கண்ணா உன் உருவை
எரிந்தது கற்பூரம் எதுவுமே மிச்சமில்லை
தெரிந்தது தேவையான தகுதி..

புல்லாங்குழல் உனது கைகளில் தவழ்ந்திருக்க
புண்ணியம் செய்ததென்ன வியந்தேன்..
காட்டிலே வாழ்ந்த அது வீட்டினை விட்டுவந்து
கஷ்டமிக ஏற்றதனை உணர்ந்தேன்..
அங்கமெல்லாம் சீவிசீவி அறுத்தனர் துண்டு துண்டாய்
அனலில் இட்டு அதை வாட்டி
துளைத்தனர் உடல் முழுதும்
சகித்தது அத்தனையும்..
கிடைத்தது கண்ணா உன் ஸ்பரிஸம் ..(கண்ணா)

யசோத நந்தபால கோபாலனே


யசோத நந்தபால கோபாலனே
ஏழை என்மீதேன் வன்மமோ
பேதை என் ஓலம் கேட்டுமே
பேசாதிருப்பதேன் கேசவா..()

நந்தகுமாரா நவனீத சோரா பிருந்தாவன வாசி கோவிந்தா
வெண்ணை அள்ளி உண்ட வேணுகானனே
மண்ணை அள்ளி உண்ட மதுசூதனா
பண்ணிசைத்த பாவையர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்ட கோமள வண்ணனாம்..
கோமளமாம் அந்த கேரளம் தன்னில்
கோயில் கொண்ட குருவாயூரப்பா (2)
கோடி தவம் நான் செய்தாலுமே-உன்
கோலம் கண்பேனோ என் வாழ்விலே
தேட கிடைக்காத செல்வமே
தேவாதிதேவா நாராயணா..
நாராயணா நமோ நாராயணா
நாராயணா லஷ்மி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா...

Monday, March 1, 2010

குழலூதி மனமெல்லாம்..


வரிகள் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ராகம் : காம்போதி
தாளம் : ஆதி
--------------------------------------
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் எனக்கேதடீ (குழலூதி)

அழகான மயில் ஆடவும் - மிக
அழகான மயில் ஆடவும் - காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)

மகர முண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழிலாகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)