Tuesday, March 2, 2010

கண்ணா உன் சன்னிதியில்..


கண்ணா உன் சன்னிதியில் நானும் இடம்பெறவேண்டும்
கருணையுடன் எனக்கு அருள்வாய்..
காலடியில் நானிருக்க காலமெல்லாம் தொழுதிருக்க
தகுதியை எந்தனுக்கு அருள்வாய்..(கண்ணா)

ஊதுவத்தி எரிவதென்ன அதற்கிங்கு தகுதியென்ன
உணர்ந்திட நானும் கொஞ்சம் விழைந்தேன்
தன்னையே எரித்துகொண்டு தருவது நறுமணத்தை
தியாகமே தகுதியென்று உணர்ந்தேன்..

பற்றியது கற்பூரம் சுற்றியது தட்டோடு
காட்டியது கண்ணா உன் உருவை
எரிந்தது கற்பூரம் எதுவுமே மிச்சமில்லை
தெரிந்தது தேவையான தகுதி..

புல்லாங்குழல் உனது கைகளில் தவழ்ந்திருக்க
புண்ணியம் செய்ததென்ன வியந்தேன்..
காட்டிலே வாழ்ந்த அது வீட்டினை விட்டுவந்து
கஷ்டமிக ஏற்றதனை உணர்ந்தேன்..
அங்கமெல்லாம் சீவிசீவி அறுத்தனர் துண்டு துண்டாய்
அனலில் இட்டு அதை வாட்டி
துளைத்தனர் உடல் முழுதும்
சகித்தது அத்தனையும்..
கிடைத்தது கண்ணா உன் ஸ்பரிஸம் ..(கண்ணா)

2 comments:

Radha said...

Very simple yet deeply meaningful !

Thilaga. S said...

Thanks for your visits and valuable comments..